From the Pastor's Desk
Weekly newsletter, reflections, and updates from our pastoral team.
மண்ணுக்கு அடியில் விதை உறங்குவதில்லை

ஆகஸ்ட் மாதத் தோட்டம்
பிரிஸ்பேனில் ஆகஸ்ட் மாதக் காலைகள் குளிராக இருக்கின்றன. பெரும்பாலான காலைகள் ஒற்றைப் படை எண்களான 5 அல்லது 6 டிகிரி செல்ஷியசில் காணப்படுகின்றன! வெளியே தோட்டத்தைப் பார்த்தால், எல்லாம் முடிந்துபோனதுபோல் தோன்றும். இலைகள் உதிர்ந்துவிட்டன. கிளைகள் வெறுமையாக நிற்கின்றன. மண் இறுகிக் கிடக்கிறது. "இங்கே ஒன்றும் நடக்கவில்லை" என்று நமது கண் சொல்கிறது.
ஆனால் கண் சொல்வது முழு உண்மையல்ல.
அதே நேரத்தில், அந்த மண்ணுக்கு அடியில் வேர்கள் அமைதியாக நீண்டுகொண்டிருக்கின்றன. கிழங்குகள் பிரிந்து பெருகுகின்றன. கடந்த இலையுதிர் காலத்தில் உருவான மொட்டுகள் மெல்ல மெல்லப் பருத்துக்கொண்டிருக்கின்றன. வாட்டில் மரங்கள் ஏற்கெனவே மஞ்சளாகப் பூக்கத் தொடங்கிவிட்டன.
வேலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. நமக்குத் தெரியவில்லை — அவ்வளவுதான்.
குளிரைக் கடந்து அல்ல — குளிரின் வழியாக
இது வெறும் உவமை அல்ல; இது தாவரவியல் உண்மை.
கோதுமை, ஆப்பிள், டூலிப், செர்ரி — இவை போன்ற பல தாவரங்கள், ஒரு குறிப்பிட்ட காலம் குளிரை அனுபவிக்காமல் பூக்கவே பூக்காது. அவற்றை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்திருந்தால், அவை வளரும், பச்சையாக இருக்கும் — ஆனால் பூக்காது. விஞ்ஞானிகள் இதற்கு vernalisation என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
குளிர் என்பது பூப்பதற்குத் தடை அல்ல; அது பூப்பதற்கான முன்நிபந்தனை.
அந்தச் செடி குளிரைத் தாண்டிப் பூக்கவில்லை. குளிரின் வழியாகவே பூக்கிறது.
தானாய் விளையும் பூமி
இயேசு சொன்ன உவமைகளில் ஒன்று மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. அது இதுதான்:
"ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்துவிட்டு, இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கிறான்; அந்த விதை, அவனுக்குத் தெரியாத விதமாக முளைத்து வளருகிறது. பூமியானது தானாய்ப் பயிரை முளைப்பிக்கும்."
— மாற்கு 4:26-28
இந்த வசனத்தில் "தானாய்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல் αὐτομάτη (automatē). ஆங்கிலத்தில் automatic என்னும் சொல் இதிலிருந்தே பிறந்தது.
இந்த உவமையில் விவசாயி என்ன செய்கிறார்? விதைக்கிறார். பிறகு தூங்குகிறார். எழுந்திருக்கிறார். மறுபடியும் தூங்குகிறார்.
அவர் பார்த்துக்கொண்டிருப்பதால் விதை முளைப்பதில்லை. அவர் கவலைப்படுவதால் அது வேகமாக வளர்வதுமில்லை. அவருடைய பதற்றம் அந்த வளர்ச்சிக்கு ஒன்றையும் சேர்ப்பதில்லை.
வளர்ச்சி நடக்கிறது — ஆனால் அது அவருடைய வேலை அல்ல.
மறைவான வேலை — வேதத்தின் சாட்சி
வேதம் முழுவதும் இந்த முறை திரும்பத் திரும்ப வருகிறது.
- யோபு 14:7-9— "ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்."
- கொலோசெயர் 3:3— "ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது." இங்கே கிரேக்கச் சொல் κέκρυπται — ஒருமுறை மறைக்கப்பட்டு, இப்போதும் மறைந்தே இருக்கிறது என்று பொருள். மறைவு என்பது குறைபாடு அல்ல; அது ஒரு நிலை.
- ஏசாயா 43:19— "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்."
- லூக்கா 2:52— "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்." நசரேத்தில் முப்பது வருடங்கள். மூன்று வருட ஊழியத்திற்கு முன்பு முப்பது வருட மௌனம். கர்த்தருடைய வாழ்க்கையிலேயே மறைவான காலம் பத்து மடங்கு நீளமானது.
நடுவிலிருக்கிற பருவம்
நம்மில் பலருக்கு இது நன்கு தெரிந்த இடம்.
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன — துக்கம் இன்னும் விலகவில்லை. வருடக்கணக்காக ஜெபித்துவிட்டோம் — பதில் இன்னும் வரவில்லை. திருமணத்தில் குளிர் இன்னும் இருக்கிறது. பிள்ளை இன்னும் தூரமாகவே இருக்கிறது. வேலை இன்னும் கிடைக்கவில்லை. உடல்நலம் இன்னும் திரும்பவில்லை.
இந்த இடத்தில் வரும் பெரிய சோதனை இதுதான்: தெரியவில்லை என்பதால் நடக்கவில்லை என்று முடிவு செய்துவிடுவது.
கவுன்சலிங் (Counselling) ஊழியத்தில் நான் கண்ட ஒரு அறியப்பட்ட உண்மை உண்டு. மக்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் விலகுவதில்லை; முடிவிலும் விலகுவதில்லை. நடுவில்தான் விலகுகிறார்கள் — முதல் நம்பிக்கை தேய்ந்துபோய், வெளியே தெரியும் முன்னேற்றம் நின்றுபோனதுபோல் தோன்றும் அந்தத் தருணத்தில். ஆனால் பெரும்பாலும் அந்தத் தருணம்தான் உள்ளுக்குள் உண்மையான வேலை நடக்கும் தருணம்.
தோட்டத்தைப் போலவே.
காத்திருத்தல் வேறு; தவிர்த்தல் வேறு
இங்கே ஒரு எச்சரிக்கை அவசியம்.
மேலிருந்து பார்க்கும்போது, உறங்கும் விதைக்கும் இறந்த விதைக்கும் வித்தியாசம் தெரியாது. இரண்டும் ஒரேமாதிரிதான் இருக்கும். எனவே நாம் இரண்டையும் பிரித்து அறிய வேண்டும்.
- காத்திருத்தல் — கடவுள் வேலை செய்துகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் நிற்பது.
- தவிர்த்தல் — கவனிக்காமல் விட்டுவிட்டால் தானாகச் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பது.
சில நேரங்களில் விசுவாசமான பதில் பொறுமை அல்ல — உதவியைப் பெற்றுக் கொள்வது. போதகரை அணுகலாம். மருத்துவர், அல்லது ஆலோசகரை அணுகலாம். அப்படிப்பட்ட தருணங்களில் உங்களுக்குத் தேவை ஒரு பாதுகாப்பான இடம்.
"பொறுத்திருங்கள்" என்பது எப்போதும் ஆவிக்குரிய பதில் அல்ல. சில நேரங்களில் அது தப்பித்தல்.
நீங்கள் இருப்பது உறக்கமா, அல்லது ஏதோ ஒன்று உண்மையிலேயே இறந்துகொண்டிருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் — தயவுசெய்து பேசுங்கள். எங்களிடம் பேசுங்கள். தனியாக முடிவு செய்யவேண்டாம்.
நமது சபையும் இதே பருவத்தில்தான்
வார்த்தை சுவிசேஷ சபை இன்னும் இளமையானது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது மெதுவாகத் தெரியலாம்.
ஆனால் வேர்கள் இறங்கிக்கொண்டிருக்கின்றன — யாரும் எண்ணிப் பார்க்க முடியாத இடத்தில்.
நாம் அவசரப்பட வேண்டியதில்லை. விதைத்தவரும் நாம் அல்ல; வளர்ப்பவரும் நாம் அல்ல.
இந்த மாதத்தின் சிந்தனை
இப்போது உங்களுக்குள் — யாருக்கும் தெரியாமல் — என்ன வளர்ந்துகொண்டிருக்கிறது?
இந்த வாரம் ஒரு நாள், அமைதியாக உட்கார்ந்து இதை எழுதிப் பாருங்கள். வெளியே காட்ட வேண்டியதில்லை. கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் மட்டும்.
ஆகஸ்ட் நமது குளிர்காலத்தின் கடைசி மாதம். செப்டம்பர் ஒன்றாம் தேதி வசந்தம் தொடங்குகிறது.
நாம் இருப்பது முடிவில் அல்ல — திருப்பத்தில்.
"இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது."
— உன்னதப்பாட்டு 2:11-12
நம்முடைய தோட்டங்கள் இன்னும் அதைக் காட்டவில்லை. ஆனால் அது ஏற்கெனவே உண்மை. நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்!
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
போதகர் வெஸ்லின்

Ps. ஜெயகரன் வெஸ்லின் (Jeyakaran Weslyn)
Senior Pastor, Vaarthai Evangelical Church Inc
