From the Pastor's Desk

Weekly newsletter, reflections, and updates from our pastoral team.

VEC-NL 2026-07 · Edition 2

திருச்சபையின் ஒரே அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே

அன்பான வார்த்தை குடும்பமே,

இயேசு கிறிஸ்த்துவின் இணையற்ற பெயராலே உங்களை வாழ்த்துகிறேன்!

நேற்று இரவு, தேவன் எனக்கு ஒரு பழைய ஞானப்பாடலை நினைவு படுத்தினார்! அதனுடைய வரிகள் இதோ...

சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

1866-ஆம் ஆண்டு Samuel John Stone என்ற போதகர் ஒரு பாடலை எழுதினார் — "திருச்சபையின் ஒரே அஸ்திபாரம் இயேசு கிறிஸ்து நம் ஆண்டவரே." ஆனால் அது வெற்றியின் மகிழ்ச்சியில் எழுதப்பட்ட பாடல் அல்ல. அந்நாளில் திருச்சபை பிளவுகளாலும், வேதத்தின் அதிகாரத்தைக் குறித்த விவாதங்களாலும் உலுக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் மத்தியில் எழுதப்பட்ட ஒரு விசுவாச அறிக்கையே இப்பாடல்.

இதன் மைய செய்தி எளிமையானது, ஆனால் ஆழமானது: சபை நிற்பது மனிதனின் பலத்தின்மேல் அல்ல, மனிதர்களின் இணக்கத்தின்மேலும் அல்ல — இயேசு கிறிஸ்துவின்மேல் மட்டுமே.

பாடல் நமக்கு நான்கு உண்மைகளை நினைவூட்டுகிறது:

  • அஸ்திபாரம் ஒன்றே — "வேறே அஸ்திபாரத்தை ஒருவனும் போடக்கூடாது" (1 கொரிந்தியர் 3:11). வார்த்தையினால் அவர் தமது மணவாட்டியாகிய சபையை உருவாக்கினார்.
  • ஐக்கியம் ஒன்றே — பல தேசங்கள், பல மொழிகள், ஆனால் ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் (எபேசியர் 4).
  • போராட்டம் உண்டு, ஆனால் அவர் கைவிடார் — சபை உபத்திரவப்படலாம்; பரிசுத்தவான்கள் "இந்த அழுகையின் இரவு எப்போது முடியும்?" என்று கேட்கலாம். ஆனாலும் கர்த்தர் தமது சபையைப் பாதுகாக்கிறார்.
  • நம்பிக்கை நிச்சயம் — அழுகையின் இரவு முடிந்து, மகிமையின் காலை உதிக்கும். இளைப்பாறுதல் வரும்.

அன்பானவர்களே, இச்செய்தி நமது வார்த்தை சபைக்கு (VEC) மிகவும் பொருத்தமானது. நாமும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். நமது எதிர்காலம் நம் சொந்த பலத்தின்மேல் அல்ல — கிறிஸ்து என்னும் அசையாத அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டிருக்கிறது. அதுவே நமது நிச்சயம்.

"நான் போடும் அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே; அதை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தை ஒருவனும் போடக்கூடாது."

— 1 கொரிந்தியர் 3:11

இந்த வாரம், உங்கள் வாழ்க்கை எந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டிருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்துவே நமது நிலையான கன்மலை.

சிங்கப்பூரைச் சேர்ந்த சபை ஒன்று, தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளிலே இணைந்து சபையின் அஸ்திபாரம் என்கிற இந்தப் பாடலை, மிக அழகாக பாடியிருக்கிறார்கள். அதைக் இங்கு கேட்டு மகிழுங்கள்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

போதகர் வெஸ்லின்

Ps. ஜெயகரன் வெஸ்லின்

Ps. ஜெயகரன் வெஸ்லின் (Jeyakaran Weslyn)

Senior Pastor, Vaarthai Evangelical Church Inc

Past Editions

Subscribe

By subscribing, you consent to receive weekly newsletters, event announcements, and spiritual updates from Vaarthai Evangelical Church Inc. You can unsubscribe at any time.