போதகர் மேசையிலிருந்து

அனலின் நடுவிலும் வாழ்க்கை!

Life in the Heat

VEC-NL • Edition #012 அக்டோபர் 2026
VEC-NL 2026-10 · Edition 12

அனலின் நடுவிலும் வாழ்க்கை!

Source: science.nasa.gov

சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியமான உயிரினத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
“Fire Amoeba” என்று அழைக்கப்படும் இந்த மிகச் சிறிய ஓரணு உயிரினம், கடுமையான வெப்பத்தை வெறுமனே தாங்கி உயிரோடு இருப்பது மட்டுமல்ல—63°C வெப்பத்திலும் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்கிறது! 64°C வெப்பத்தில்கூட தொடர்ந்து செயல்படுகிறது.

இதில் என்னைக் கவர்ந்த விஷயம் இதுதான்:
அது வாழ்வதற்கு வெப்பம் மறைய வேண்டிய அவசியமில்லை. அந்த வெப்பத்தின் நடுவிலேயே வாழும் திறன் அதற்கு இருக்கிறது.

இதை வாசித்தபோது ஏசாயாவில் தேவன் சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது:

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது."
— ஏசாயா 43:2

தேவன், “உன் வாழ்க்கையில் அக்கினியே வராது” என்று சொல்லவில்லை.
“நீ அக்கினியில் நடக்கும்போது…” என்கிறார்.

சில நேரங்களில்,
“ஆண்டவரே, இந்தச் சூழ்நிலையிலிருந்து என்னை வெளியே கொண்டுவாருங்கள். இந்த அழுத்தத்தை நீக்குங்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுங்கள்”
என்று நாம் ஜெபிக்கிறோம்.

சில நேரங்களில் தேவன் அப்படியே செய்கிறார்.

ஆனால் சில காலங்களில் அனல் உடனடியாக மாறுவதில்லை. அதற்குப் பதிலாக, அந்த அனலின் நடுவிலும் வாழவும், வளரவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் தேவன் நமக்குக் கிருபை தருகிறார்.

ஒருவேளை நீங்களும் இப்போது ஒரு “அனலின்” வழியாகச் சென்றுகொண்டிருக்கலாம்.
குடும்பப் பிரச்சனை, பொருளாதார அழுத்தம், வேலைப்பளு, ஏமாற்றம், எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமின்மை, அல்லது இன்னும் பதில் கிடைக்காத ஒரு ஜெபம்...

அக்கினி இருக்கிறது என்பதால், தேவன் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள்.

அவர் சொல்கிறார்:

"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்… நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்."

தேவனுடைய அற்புதம் எப்போதும் அக்கினியை அகற்றுவது மட்டுமல்ல.
சில நேரங்களில் அக்கினியின் வழியாக நம்மை நடத்தி, அதன் நடுவிலும் அவர் நம்மோடு இருந்தார் என்பதை உணரச் செய்வதும் அற்புதம்தான்.

நம்மால் முடியாது என்று தோன்றும்போது, அவருடைய இன்னொரு வாக்குத்தத்தத்தை நினைவுகூருவோம்:

"என் கிருபை உனக்குப் போதும்."
— 2 கொரிந்தியர் 12:9

எனவே இந்த வாரம் நமது ஜெபம் இப்படியாக இருக்கட்டும்:

“ஆண்டவரே, இந்த அனலை இன்னும் நீர் அகற்றவில்லையென்றால், அதன் வழியாக விசுவாசத்தோடு நடக்க எனக்குக் கிருபை தாரும்.”

அனல் கடுமையாக இருக்கலாம்.
ஆனால் அவருடைய கிருபை போதுமானது!

ஆசீர்வாதங்களுடன்,
பாஸ்டர் வெஸ்லின்
வார்த்தை சுவிசேஷ சபை