போதகர் மேசையிலிருந்து
போதகரின் வாராந்திர கடிதம் மற்றும் சபையின் செய்திகள்.
கோடரியைக் கூர்மையாக்குங்கள்

“ஒரு கோடரி மழுங்கிப் போய் அதன் முனை தீட்டப்படாமல் இருந்தால், அதைக்கொண்டு வெட்ட அதிக பலம் தேவைப்படும். ஆனால் ஞானமோ வெற்றியைக் கொண்டுவரும்..”
— பிரசங்கி 10:10
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை சொன்னார்: "ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் தந்தால், நான் முதல் நான்கு மணி நேரத்தைக் கோடரியைக் கூர்மையாக்குவதில் செலவிடுவேன்." இந்த வார்த்தைகள் எளிமையானவை, ஆனால் ஆழமான ஞானத்தை உள்ளடக்கியவை.
ஒவ்வொரு நாளும் செய்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. வேலைகள், பொறுப்புகள், சவால்கள் — வெட்டுவதற்கு மரங்கள் எப்போதும் இருக்கின்றன!
ஆனால் கோடரி மழுங்கியிருந்தால்?
“இரும்பு மழுங்கலாயிருக்க, ஒருவன் அதின் முனையைத் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ண வேண்டியதாகும்…”
— பிரசங்கி 10:10
சில நேரங்களில் பிரச்சனை மரத்தின் அளவில் இல்லை; கோடரியின் நிலையில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைத் தொடங்குவதற்கு முன் நான் கேட்க வேண்டிய கேள்வி:
இன்றைய நாளை எதிர்கொள்ள நான் என்னைத் தீட்டிக்கொண்டேனா?
ஒரு விசுவாசியைத் தீட்டுகிற மிக முக்கியமான காரியங்களில் ஒன்று தேவனுடைய வார்த்தை.
“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”
— ரோமர் 12:2
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நம் மனதை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது.. செய்திகள், சமூக ஊடகங்கள், கவலைகள், ஏமாற்றங்கள், வாழ்க்கையின் அழுத்தங்கள் எல்லாம் காலையில் எழுந்த உடனேயே நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கி விடுகின்றன.
அதனால்தான், அன்றைய நாளை எதிர்கொள்வதற்கு முன் தேவனுடைய வார்த்தை நம்மை வடிவமைக்க வேண்டும்.
அவருடைய வார்த்தை நமது சிந்தனையைப் புதுப்பிக்கிறது; பார்வையைச் சரிசெய்கிறது; விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது; தீர்மானங்களுக்கு ஞானத்தைத் தருகிறது.
“இன்று நிறைய வேலை இருக்கிறது; வேதம் வாசிக்கவும் ஜெபிக்கவும் நேரமில்லை” என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது,
“வெட்டுவதற்கு நிறைய மரங்கள் இருக்கின்றன; கோடரியைத் தீட்ட நேரமில்லை!”
என்று சொல்வதைப் போன்றது.
தேவனோடு செலவிடும் நேரம் வீணான நேரமல்ல. அதுதான் மற்ற அனைத்திற்குமான ஆயத்த நேரம்.
எனவே, இந்த வாரம் உங்கள் To-Do List-ஐ எடுப்பதற்கு முன், தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்.
வாசியுங்கள்.
தியானியுங்கள்.
ஜெபியுங்கள்.
செயல்படுவதற்கு முன், அவரோடு இருங்கள்.
மரத்தை வெட்டுவதற்கு முன், கோடரியைத் தீட்டுங்கள்!
காலை தோறும் இயேசுவே - தின தியானப் பாடல்
பாடல் & இயக்கம்: Ps. ஜெயகரன் வெஸ்லின் (Morning Meditation Song)
இந்த வாரத்திற்கான பயிற்சி / THIS WEEK'S PRACTICE
- தினமும் காலையில் 15 நிமிடங்கள் வேதவாசிப்புக்கு ஒதுக்குங்கள்.
- வேலை தொடங்கும் முன் ஒரு குறுகிய ஜெபத்துடன் தொடங்குங்கள்.
- “நான் எதை சாதிக்க வேண்டும்” எனக் கேட்பதற்கு முன், “நான் யாருடன் நடக்கிறேன்” எனக் கேளுங்கள்.
ஜெப குறிப்புகள் / PRAYER POINTS
- நம்முடைய சபையின் இளம் குடும்பங்களுக்காக.
- மூத்த உறுப்பினர்கள் இளம் தலைமுறையினரை சரியான விதத்தில் வழி நடத்தும்படியான ஞானத்திற்காக.
- நம சபையின் சிறு பிள்ளைகளும், வாலிபர்களும் தேவனால் தொடப்படும்படியாக.
அறிவிப்புகள் / ANNOUNCEMENTS
- புதன் இரவு, “சங்கீத தியானங்களும், ஜெபமும்" நிகழ்வில் (Zoom) தவறாது கலந்து கொள்ளுங்கள்.
- ஞாயிறு காலை ஆராதனை, சரியாக 10 மணிக்கு ஆரம்பிப்பதற்கு ஒத்துழைக்குமாறு வேண்டப் படுகிறீர்கள்.

Ps. Jeyakaran Weslyn
Senior Pastor, Vaarthai Evangelical Church Inc
